நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது - நடிகை மதுபாலா

முத்த காட்சியில் நடிப்பது மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது என நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்.
சென்னை,
ரோஜா, ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மதுபாலா. தென்னிந்திய திரை உலகில் மட்டும் இன்றி இந்தி திரை உலகிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த மதுபாலா திருமணத்திற்கு பிறகு சினிமா நடிப்புக்கு சில ஆண்டுகளாக இடைவெளி விட்டிருந்தார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். விஷ்ணு மஞ்சு நடித்துள்ள 'கண்ணப்பா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மதுபாலா கூறியதாவது:-
நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் வளர்ந்தேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அதனால் பல சினிமா வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன்.
ஒரு படத்தில் என்னிடம் முன்கூட்டியே சொல்லாமல் முத்தக் காட்சியில் நடிக்க சொன்னார்கள். அதுவும் உதடு முத்தக் காட்சியில் நடிப்பதற்கு என்னிடம் அதிக நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்த காட்சியில் நடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி கூறினர். இதைத்தொடர்ந்து உதடு முத்த காட்சியில் நான் நடிக்க வேண்டியதிருந்தது. அது எனக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது.
ஆனால் எடிட்டிங்கில் பார்த்தபோது பட குழுவினர் அந்த காட்சிக்கு உதடு முத்தம் தேவை இல்லை என நீக்கி விட்டார்கள். இப்போதைய 22 வயது மற்றும் 24 வயது நடிகைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால் நான் 22 வயதில் மிகவும் அப்பாவியாக இருந்தேன். அதனால் தான் சில விஷயங்களில் நான் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






