

சென்னை,
அறிமுக இயக்குனர் கிஷோர்குமார் இயக்கத்தில் 'ஹார்ட்டின்' என்ற படம் தயாராகி இருக்கிறது. 'டிமாண்டி காலனி', 'பேட்ட', 'மகான்' படங்களில் நடித்து கவனம் ஈர்த்த சனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக டி.இமயா என்பவர் அறிமுகமாகிறார்.
இவர் வேறு யாருமல்ல, தமிழக அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் ஆவார். அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த படிப்பை முடித்தவர், சென்னை திரும்பியதும் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். ஆடிஷனில் கலந்துகொண்டு சிறந்த நடிப்பால் படத்தின் கதாநாயகியாக தேர்வான இமயா, படத்தின் திரைக்கதை பணிகளையும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. காதல் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, "படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கதாநாயகி இமயா, அமைச்சர் மகள் என்ற பந்தாவே இல்லாமல் இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார்", என்றனர்.
நடிகை இமயா கூறுகையில், "சினிமா எனக்கு பிடித்தமான துறை. அதில் கதாநாயகியாக களமிறங்குவது மகிழ்ச்சி தருகிறது. அசத்தலான நடிப்பை தந்து ரசிகர்களை ஈர்ப்பேன். கடின உழைப்பை தொடர்ந்து அளிப்பேன்”, என்றார்.