இயக்கம், நடிப்பு இரண்டும் செய்வேன்- முன்னாள் நிதி அமைச்சர் மகள் இமயா

கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடித்துள்ள ‘ஹார்டின்’ படம் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்கம், நடிப்பு இரண்டும் செய்வேன்- முன்னாள் நிதி அமைச்சர் மகள் இமயா
Published on

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஹார்டின்’. கிஷோர் குறும் படங்கள், வெப் தொடர்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சனந்த் நடிக்கிறார். இவர் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் இமயா தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள். இவர் இப்படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த படிப்பை முடித்தவர், சென்னை திரும்பியதும் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். ஆடிஷனில் கலந்துகொண்டு சிறந்த நடிப்பால் படத்தின் கதாநாயகியாக தேர்வான இமயா, படத்தின் திரைக்கதை பணிகளையும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கதாநாயகி இமயா, அமைச்சர் மகள் என்ற பந்தாவே இல்லாமல் இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார்” என்றனர்.

‘ஹார்டின்’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. முன்னாள் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா திரைக்கதை நுட்பங்களைப் பாடமாக எடுத்து நியூயார்க்கில் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இதன் திரைக்கதையில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது. இந்த படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டது” என்கிறார் இயக்குனர்.

வெளிநாட்டில் திரை துறை சார்ந்த படிப்பை முடித்துள்ள இமயா, தமிழில் சில படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்துள்ளார், தற்போது ‘ஹார்டின்’ படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். இது பற்றி கேட்டபோது, “நான் திரைத்துறைக்கு வருவதை ஆரம்பத்தில் என் குடும்பத்தினர் விரும்பவில்லை, தடுத்தனர். ஆனால் நான் பெரும் முயற்சி செய்து, என் விருப்பத்தை தெரிவித்து இந்த துறைக்கு வந்தேன், சில படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். கதை விவாதங்களில் கலந்து கொண்டேன். தற்போது ‘ஹார்டின்’ படம் மூலம் கதாநாயகியாக நடித்துள்ளேன். எதிர் காலத்தில், படம் இயக்குவேன், நடிக்கவும் செய்வேன். என் ஆசைகள் பல உள்ளன. அரசியல், சினிமா இரண்டுமே கடினமான துறைகள் தான். தற்போது சினிமாவில் கவனம் செலுத்துகிறேன். என் குடும்பத்தில் இருந்து நான் தான் முதலில் நடிக்க வந்துள்ளேன். மக்கள் சப்போர்ட் எனக்கு எப்போதும் வேண்டும்” என்கிறார் இமயா. இப்படம் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com