

சென்னை,
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவர் நடிகை ஸ்ரீலீலா. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'கிஸ்' திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'பகவந்த் கேசரி', 'குண்டூர்காரம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் 'ஓம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களுடன், பல்வேறு கடை திறப்பு விழாக்களிலும் ஸ்ரீலீலா தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ரசிகர்களை நேரில் சந்திக்கும் இந்த நிகழ்வுகள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீலீலா கூறுகையில், "ரசிகர்களை மிக அருகில் பார்க்கும்போது அவர்களுடைய அன்பும், ஆர்ப்பரிப்பும் எனக்கு புதிய உற்சாகத்தை அளிக்கிறது. அந்த ரசிகர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். என்னைப் போன்ற கலைஞர்களை வாழ வைப்பது ரசிகர்கள்தான். அதனால், அவர்களுக்கு நல்ல படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன், என்றார்.
ரசிகர்களின் ஆதரவும் அன்பும்தான் தனது திரைப் பயணத்தின் மிகப்பெரிய பலம் என்றும், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புவதாகவும் ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.