

மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கும் தனது 2-வது மனைவி ஜாய் கிரிசில்டாவுக்கும் பிறந்த குழந்தையான ராகா ரங்கராஜூடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு என் குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்வேன் என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்திருந்தது.
குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜூவுக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சோதனை செய்யப்பட்டது. இதில் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா என்பது டி.என்.ஏ சோதனையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் குறித்து ஜாய் கிரிசில்டா தொடர்ந்து பதிவுகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். பின், இருவரும் சுமூகமான முடிவை எட்டியதாகத் தெரிகிறது. தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ‘ராகா ரங்கராஜ்’ என்றும் பெயரிட்டதை தெரிவித்தார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டு, “என் மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்தையும் கடந்த 6 மாதங்களாக முழுபொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப்பொறுப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.