“பாகுபலி” போன்ற வரலாற்று படங்களில் நடிக்க ஆசை - நடிகர் நாகார்ஜுனா

பழங்காலத்துப் படங்களில் நடிக்க தனக்கு ஆசை என்று நடிகர் நாகார்ஜுனா பேசியிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் 'சிவா' படத்தின் மூலம் அறிமுகமான நாகார்ஜுனா, 70-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'ரட்சகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிட்சயமாக உள்ளார். ரசிகர்களிடம் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். 65 வயதான நாகார்ஜுனா, இன்னும் படங்களில் பிசியாக இருப்பதும், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராகவும் உள்ளார். பிரதமர் மோடி சமீபத்திய 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் மறைந்த தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவை நினைவுக்கூர்ந்தார்.
ரஜினியின் 'கூலி' படத்தில் நடித்து ஸ்டைலிஸான வில்லனாக ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார் நாகார்ஜுனா. அவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 3,572 கோடி என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் நாகார்ஜுனா, “இயக்குநர் ராஜமவுலி 'பாகுபலி' படத்தில் எனக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பாகுபலி போன்ற வரலாற்றுப் படங்கள், ராஜாக்கள் கதை, பழங்காலத்துப் படங்களில் நடிக்க எனக்கு ஆசை.பிரமாண்டமான கதை, ராஜ்ஜியங்கள், மன்னர்கள், இளவரசன், இளவரசிகள் போன்ற கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுபோன்ற படங்களைப் பார்க்கவும், அவற்றில் நடிக்கவும் எனக்குப் பிடிக்கும். ஹாலிவுட்டில் 'டிராய்', '300' படங்கள் எனக்குப் பிடித்த திரைப்படங்கள்” என்று பேசியிருக்கிறார்.






