

'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மற்றும் 'ரெட்ரோ' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முற்றிலும் சுயாதீன பாணியில் உருவாக உள்ளது. இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ், தம்மம் பிலிம்ஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. தனது 10-வது மைல்கல் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இது இளையராஜாவின் திரையுலக பயணத்தில் 1540-வது திரைப்படமாகும்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' (அனிருத்) தவிர மற்ற 8 படங்களுக்கும் சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருந்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள புதிய படத்தின் பின்னணி இசை தனி ஆல்பமாக பட ரிலீஸுக்கு முன்பே வெளியாகுமென தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் “மகான் படத்துக்குப் பிறகு நான் எடுக்க நினைத்த, எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது எனது 10வது திரைப்படம். ஒரு கதைதான் கதைசொல்லியைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை நான் மிகவும் நம்புகிறேன். இந்தக் கதை தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளது. கிடைத்த வாய்ப்புகளில் சிறந்த மனிதர்களால் இந்தப் படம் உருவாகியுள்ளது.
நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் முதல்முறை கதை சொல்லும்போதிருந்தே என்னுடைய நோக்கத்திலேயே அவர்களும் இருந்தார்கள். என்னுடைய கனவுதான் அவர்களுடையதுமாக இருந்தது.நம்பமுடியாத ஒன்று என்னவெனில் மேஸ்ட்ரோ இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைப்பதுதான். இது அவரது 1540வது படம். நான் அவரது இசையைக் கேட்டு வளர்ந்தவன். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவரது பின்னணி இசையோ பாடலோ பொருந்திப்போகும். மகிழ்ச்சி, சோகம், காதல், கோபம், உத்வேகம் என எல்லாமே அவரது இசையில் ஒன்றிணைந்திருக்கும். எனக்கு அவர் வாழ்க்கை முறை. பலருக்கும் அப்படித்தான்.
அவருடன் வேலைப் பார்ப்பது என் வாழ்நாள் கனவு. முந்தைய படங்களுக்கு அவரிடம் செல்லும் தைரியம் எனக்கு இல்லை. இந்தப் படத்தின் முதல் கட் முடித்த பிறகு அவரிடம் காட்ட வேண்டுமென நினைத்தேன். அவர் சம்மதம் தெரிவிப்பார் என வலுவாக நினைத்தேன். அதே மாதிரி அவரும் கூறினார். சனிக்கிழமை இரவு அவர் படத்தைப் பார்த்தார். படம் பிடித்ததால் அடுத்த நாள் காலை முதலே இசையமைக்கலாம் என்றார். அதுமுதல் அடுத்த 25 நாள்கள் ராக தேவனுடன் ஆன்மிகப் பயணம் சிறப்பாக அமைந்தது.
இசையை உருவாக்குவதை நேரடியாகப் பார்ப்பது மிகவும் நம்பமுடியாததாக இருந்தது. மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். பாடல்களைத் தாண்டி பின்னணி இசையை தனி ஆல்பமாக படத்தின் ரிலீஸுக்கு முன்பாக வெளியிடலாம் என இளையராஜா சாருமே கூறியுள்ளார். அதனால், விரைவில் அதனை வெளியிடவிருக்கிறோம். நீங்கள் அனைவரும் அதைக் கேட்டு, உணர்ந்து, மெய்மறந்து போவதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்” என அறிக்கையில் கூறியுள்ளார்.