

மதுரை,
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியை சேர்ந்த சின்னச்சாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி அன்று ஜனநாயகன் திரைப்ப டம் வெளியானது. இந்த படத்தில் வரும் காட்சியில் பாப்பாபட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது போலவும், அங்கு வாக்களிக்க சென்றவர்களின் கைகள் வெட்டப்படுவது போலவும்,
சிறுமிகள், பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது போலவும் தவறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் எங்கள் கிராம மக்களின் கண்ணியத்திற்கும். நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு குறித்து தணிக்கை வாரியம், தயாரிப்பாளர் பதில் அளிக்கும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தணிக்கை வாரியம் சார்பில் வக்கீல் ஆஜராகி, இந்த படத்தில் பாப்பம்பட்டி என்ற பெயர்தான் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மனுதாரர் கிராமத்தின் பெயர் இடம்பெறவில்லை என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சினிமாவில் கற்பனை தவிர்க்க முடியாதது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.