

சென்னை,
'வேம்பயர்' (காட்டேரி) படங்கள் ஹாலிவுட்டுக்குப் பழசு. ஆனால் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அப்படிப்பட்ட கதைக் களத்தில் இம்மார்டல் படம் உருவாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது 'இம்மார்டல்' என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, 'வேம்பயர்' (காட்டேரி) படங்கள் ஹாலிவுட்டுக்குப் பழசு. ஆனால் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அப்படிப்பட்ட கதைக் களத்தில் இம்மார்டல் படம் உருவாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். இத்தனை ஆண்டு அனுபவத்தில் எந்தப் புகாரும் சினிமாத்துறையினர் சார்பில் வந்தது கிடையாது. காரணம், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் ஆள். என்னைப் பொறுத்தவரை எனது 60 நாட்களை எப்போதுமே திட்டமிட்டு வைத்துக் கொள்வேன். அந்த நாட்களில் நான் கொடுக்கும் வாக்கை 100 சதவீதம் நிறைவேற்றுவேன். அதேபோல மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை இசையில் ஒரு கருவியாகப் பயன்படுத்தலாமே தவிர, அதைச் சார்ந்து இருக்கவே கூடாது. புதிய பரிமாணத்தில் படங்கள் நடித்து ரசிகர்களை ஈர்ப்பது என் ஆசை. அதைத் தொடர்ந்து செய்வேன்", என்றார்.