“சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும்” வித்யாபாலன் ஆவேசம்

சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது என்று நடிகை வித்யாபாலன் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து வித்யாபாலன் பேட்டி அளித்துள்ளார்.
“சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும்” வித்யாபாலன் ஆவேசம்
Published on

சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும். நான் 16 வயதில் இந்தி தொடரில் நடித்தேன். பிறகு வங்க மொழி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் இருந்து இந்திக்கு வந்தேன்.

முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படம் பெரிய நட்சத்திர அந்தஸ்தை தந்தது. ஒரே மாதிரி நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேடினேன். அதன்பிறகுதான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைந்தன. த டர்டி பிக்சர், கஹானி போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தன. எனது திறமையையும் வெளிக்காட்ட முடிந்தது.

எல்லா நடிகைகளுக்குள்ளும் திறமைகள் ஒளிந்து கிடக்கிறது. ஆனால் அதற்கேற்ற கதைகளும், கதாபாத்திரங்களும் அமைவது இல்லை. இன்றைய பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையிலும், தொழில்களிலும் ஆண்களை விட அதிகமாக உழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை.

கணவர் ஒத்துழைப்பு இருந்தால் பெண்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவியாக எத்தனை கணவன்மார்கள் இருக்கிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. காலம் மாறிக்கொண்டு வருகிறது. சினிமா துறை கதாநாயகர்களுக்கு சொந்தமானது இல்லை. கதாநாயகிகளும் தனித்து சாதிக்கிறார்கள்.

கதாநாயகர்கள் படங்களை போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையும் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். எனக்கு திருமணம் ஆனதும் இனிமேல் சினிமா அவ்வளவுதான். ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள் என்றனர். ஆனால் திருமணத்துக்கு பிறகு நான் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடின. திருமணத்துக்கு பிறகும் நடிகைகளால் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன்.இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com