கைவிடப்படுகிறதா இளையராஜாவின் பயோபிக் படம்?

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிக்க இருந்தார்.
கைவிடப்படுகிறதா இளையராஜாவின் பயோபிக் படம்?
Published on

சென்னை,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க அதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். அதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருந்தார். இப்படத்தை 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருந்தார். இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பை கமல்ஹாசன் ஏற்றிருந்தார். இதனால் இளையராஜா பயோபிக் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. 

இளையராஜாவும், மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கப் போவதாக விழா ஒன்று நடைபெற்றது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜாவின் இசையையே பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்தனர். தனுஷ் குபேரா படத்தினை நிறைவு செய்ததும், இந்த பயோபிக் படத்தை துவங்க திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையில் தற்போது, இப்படத்தை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாலும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com