4 வாக்காளர் அடையாள அட்டைகள் விவகாரம்... பிரகாஷ்ராஜ் மீது நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை!

கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதால் நடிகர் பிரகாஷ்ராஜ் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
4 வாக்காளர் அடையாள அட்டைகள் விவகாரம்... பிரகாஷ்ராஜ் மீது நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை!
Published on

பெங்களூரு,

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதாவது, இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு நபருக்கு, ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரகாஷ்ராஜிடம் 4 வாக்காளர் அட்டை இருப்பதாக கூறப்படுவதால், அதுபற்றி பெங்களூருவை சேர்ந்த வக்கீலான திலீப்குமார் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

பிரகாஷ்ராஜுக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரண்டு

அதுபோல், நடிகர் பிரகாஷ்ராஜ் மீது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமும் வக்கீல் திலீப்குமார் புகார் அளித்திருந்தார். தேர்தல் ஆணையமும் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திலீப்குமார் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும், விசாரணைக்கு ஆஜராகும்படி பிரகாஷ்ராஜுக்கு 2 முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக ஜாமீன் இல்லாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கைது செய்ய வாய்ப்பு

இதனால் நடிகர் பிரகாஷ்ராஜ் எப்போது வேண்டுமானாலும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்கவும், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் சட்ட நிபுணர்களுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

4 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக கூறும் விவகாரத்தில் பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதால் நடிகர் பிரகாஷ்ராஜ் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com