

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது, பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை தமன்னா, திரையுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது கிரேஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது ‘புருஷன்’ படத்தில் நடித்துவருகிறார்.
சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருப்பது பற்றி டெல்லியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார் தமன்னா. அதில் அவர், “என்னுடைய அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.நான் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் புதிதாகத் தொடங்குவது போலவே உணர்கிறேன்.குறிப்பாகப் பெண் நடிகர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அரிது. பார்வையாளர்கள் தொடர்ந்து எனக்கு அன்பைத் தருகிறார்கள்.அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். தென்னிந்திய சினிமாக்கள் மூலம் மக்கள் என்னை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டனர்.
அதே சமயம், இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் இந்த அன்பு எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. மக்கள் எனக்குத் தொடர்ந்து கொடுத்து வரும் அன்பை, நான் அவர்களுக்கு எவ்விதத்தில் திரும்பச் செலுத்தலாம் என்பதற்கான வழிகளையும் இடைவிடாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்” என பேசியிருக்கிறார்.