

சென்னை,
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில், திருவேற்காட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கே.வி.என். புரொடக்சன் (KVN Productions) தயாரிப்பில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை வாரியத்தின் (CBFC) மறுஆய்வு குழுவின் பரிசீலனையில் இருந்தபோதே, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துத் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
"எனக்கும் திரைத்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானதில் எனக்கு எந்தவிதப் பங்கும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கப் போலீசார் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "மனுதாரர்தான் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி. அவர்தான் சட்டவிரோதமாகப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் தேவை" என்று அவர் வாதிட்டார்.
போலீஸ் தரப்பில், வழக்கில் கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மனுதாரர் குற்றவாளியாக சேர்க்கப்பட் டுள்ளார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.