

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான 'ஜனநாயகன்', இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 23-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகும் முன்பும், வெளியான பிறகும் பல்வேறு சவால்களை சந்தித்தது. குறிப்பாக, திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே 'ஜனநாயகன்' சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இருப்பினும், விஜய்யின் கடைசி படம் என்ற உணர்வால் ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளுக்கு திரண்டு படத்தை கொண்டாடினர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.217.48 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதி விடுமுறை மற்றும் ரசிகர்களின் தொடர் ஆதரவு காரணமாக, வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.