

சென்னை,
விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது 'ஜன நாயகன்' படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத்தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், ஜன நாயகன் படம் அதிகாரபூர்வமாக வெளியாகும் வரை காந்திருங்கள் என மமிதா பைஜு விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அன்பான பார்வையாளர்களே,
தினமும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கும் பலரின் கடின உழைப்பு, பேரார்வம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலமே ஒரு திரைப்படம் உயிர் பெறுகிறது.
அது சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதைக் காண்பது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கிறது. சில தருணங்கள், அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின்படியே, பெரிய திரையில் ஒன்றாகக் கண்டு ரசிக்கப்பட வேண்டியவை.
அது அதிகாரபூர்வமாக வெளியாகும் வரை காத்திருந்து, சரியான முறையில் அதைக் கண்டு மகிழ்வோம். தயவுசெய்து திருட்டுத்தனத்தை ஆதரிக்காதீர்கள். அதன் மூலமே நாம் சினிமாவையும், அதற்குப் பின்னால் உள்ள அனைவரையும் பாதுகாக்க முடியும்.
மமிதா பைஜு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.