

மும்பை,
பிரபல இந்தி நடிகை ரவீனா தாண்டன்-இன் அண்ணன் ராஜீவ் தாண்டன் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்த ராஷி சாப்ரியா என்பவர் மீது இந்த திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நடிகையின் தாயை கவனித்து வந்த ராஷி சாப்ரியா, நீண்ட காலமாக குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றிருந்தார். கடந்த ஆண்டு வீட்டில் இருந்த தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மாயமான நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவற்றை ராஷி சாப்ரியா திருடியிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
திருடிய பொருட்களை திருப்பித் தருவதாக அவர் உறுதியளித்ததால் முதலில் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், நகைகளை திருப்பி வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்ததுடன், குடும்பத்தினர் மீது போலி போதைப்பொருள் புகார் அளிப்பதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜீவ் தாண்டன் குடும்பத்தினர் ஜூகு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஷி சாப்ரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.