மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர் தனது தோள்பட்டை அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து  வீடு திரும்பிய  நடிகர் ஜூனியர் என்டிஆர்
Published on

அறுவை சிகிச்சை முடித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் வீடு திரும்பியதாக கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். தற்போது ‘கே.ஜி.எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இவர் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமா ராவின் பேரன் ஆவார்.

படப்பிடிப்பில் காயம்

‘டிராகன்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஜூனியர் என்டிஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் ஜூனியர் என்டிஆருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், அவர் முழுமையாக குணமடைந்து 2 முதல் 3 மாதங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது”

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் ஜூனியர் என்டிஆர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்த அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நான் நலமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அறுவைச் சிகிச்சை முடித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் வீடு திரும்பியதாக கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com