ரசிகர்களின் செயல்கள் குறித்து ஜூனியர் என்.டி.ஆர். கவனம் செலுத்த வேண்டும்! – ஐதராபாத் காவல் ஆணையர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், ஜான்வி கபூரை ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையிலான போலி வீடியோக்கள் இணையத்தில் பரவியது.

ரசிகர்களின் செயல்கள் குறித்து ஜூனியர் என்.டி.ஆர். கவனம் செலுத்த வேண்டும்! – ஐதராபாத் காவல் ஆணையர்
Published on: 

ஐதராபாத்,

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது ரசிகர்களின் செயல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று ஐதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘தேவரா’ பாடலால் சர்ச்சை

ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேவரா’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சுட்டமல்லே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பாடலில் ஜான்வி கபூர் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், பாடல் காட்சிகளைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்து, ஜான்வி கபூரை ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையிலான போலி வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இந்தச் சம்பவத்துக்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

போலி புகைப்படம் குறித்தும் எச்சரிக்கை

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் முகங்களைத் தவறாகப் பயன்படுத்தி போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஜான்வி கபூர் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை தொடர்பாகப் பரவிய ஐதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனாரின் புகைப்படமும் போலியானது எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எச்சரித்துள்ள சஜ்ஜனார், தனது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சில ரசிகர்களின் செயல்கள் குறித்து ஜூனியர் என்.டி.ஆர். கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்த பின்னரே அவற்றைப் பகிர வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com