என் கேரியரில் "கராத்தே பாபு" முக்கியமான படம் - ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் கணேஷ் பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ரவி மோகன் அளித்த பேட்டியில் "'கராத்தே பாபு' படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கிட்டதட்ட இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டிவிட்டோம். இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. அப்படத்தில் இருப்பது போன்று என்னை நானே பார்த்தது கிடையாது. புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் தான். அது 'கராத்தே பாபு' படத்தில் நடக்கிறது. அப்படம் என் கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
'ஜீனி' படப்பிடிப்பு மொத்தமாக முடிவுற்று, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் வெளியீட்டுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சுதா கொங்காரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லலாம். அதில் சில புதிய விஷயங்கள் முயற்சி செய்கிறேன்" என்று தெரிவித்தார்.






