

சென்னை,
விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’ படத்துடன் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படம் பாக்ஸ் ஆபீசில் மோத உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ’சர்தார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதற்கிடையில், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ’ரணபலி’ வரும் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ‘சர்தார் 2’ திரைப்படமும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வார இறுதியை குறிவைத்து வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ‘ரணபலி’ திட்டமிட்டபடி செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகுமா அல்லது தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால், கார்த்தி மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இரு முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இடையே கடும் பாக்ஸ் ஆபீஸ் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.