பொதுவெளியில் பகிராத ஒரு விஷயத்தை பகிர்ந்த டைட்டானிக் பட நாயகி ரோஸ்

ஹெவன்லி கிரியேச்சர்ஸ் படத்தில் இரண்டு பெண்களுக்கும் இடையயான மிகத் தீவிரமான இணைப்பில் ஏதோ ஒன்று இருந்தது என்று கேட் வின்ஸ்லட் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
ரோஸ் என்றாலே இவர் ஞாபகம் வரும் அளவுக்கு எல்லாத் தலைமுறையினரும் ரசிக்கும் டைட்டானிக் படத்தின் நாயகி கேட் வின்ஸ்லட். ஹாலிவுட் படங்கள் பார்க்காதவர்கள் கூட, "டைட்டானிக்" படத்தை மட்டும் ஒரு முறையாவது பார்த்திருப்பார்கள். கதைக்காகவும், கேட் வின்ஸ்லட்'டிற்காகவும். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நடிகர்கள் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லட் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்த திரைப்படம் தான் டைட்டானிக்.
மிகப்பெரிய சொகுசுக் கப்பலில் பயணம் செய்யும் ஏழை ஓவியனுக்கும் சீமாட்டியான நாயகிக்குமான காதல் கதையாக உருவான இது பல ஆஸ்கர்களைக் குவித்தது. இப்படத்தில் நாயகி கேட் வின்ஸ்லட் 'ரோஸ்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழடைந்தார். பலமுறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தவருக்கு 2008 ஆம் ஆண்டு தி ரீடர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. தற்போது, 50 வயதாகும் கேட் வின்ஸ்லட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நேர்காணலில் பேசிய கேட்,
நான் இதுவரை பொதுவெளியில் பகிராத ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். என்னுடைய பருவகால வயதில் நிறைய பெண்களுடனே நேரம் செலவழித்தேன். அப்போது பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் முத்தங்கள் கொடுத்தாலும் ஆர்வம் காரணமாக பெண்களிடம் நெருக்கமான அனுபவங்கள் இருந்தன. ஆனால், ஆரம்ப காலத்தில் அப்படி இருந்தாலும் அந்த திசையில் நான் பயணிக்கவில்லை.
ஹெவன்லி கிரியேச்சர்ஸ் திரைப்படத்தில், இரண்டு இளம் பெண்களுக்கிடையே காட்டப்பட்ட தீவிரமான உணர்ச்சிப் பிணைப்புடன் என்னை ஆழமாக இணைத்துப் பார்த்தேன். அந்த இரண்டு பெண்களுக்கும் இடையயான மிகத் தீவிரமான இணைப்பில் ஏதோ ஒன்று இருந்தது. அதை நான் மனதார ஆழமாகப் புரிந்து கொண்டேன், எனத் தெரிவித்துள்ளார். கேட் வின்ஸ்லட்டின் இந்த அனுபவம் ஹாலிவுட் ரசிகர்களிடம் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.






