

கேரள சினிமாவுக்கு வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் தொழில்துறைக்கான அந்தஸ்து வழங்கப்படும் என கேரள சினிமா, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஷ்ணுநாத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் 100 நாள் செயல் திட்டத்தின் காலக்கெடுவான அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் கேரளத்தின் சினிமாவுக்கு ‘தொழில்’ அந்தஸ்து வழங்கப்படும் என அமைச்சர் விஷ்ணுநாத் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டில் இதுவரை எந்தவொரு மாநிலத்திலும் திரைத்துறைக்குத் தொழில் அந்தஸ்து வழங்கப்பட்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் “எனக்குத் தெரிந்த வரை, நாட்டின் எந்தவொரு மாநிலமும் சினிமாவை தொழில்துறையாக மதிப்பது இல்லை. முதல்முறை கேரளம், சினிமாவை தொழில்துறை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது” என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திரைத்துறை ஒரு முறையான தொழில் கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதும் அதற்கு தேவையான நிர்வாக மாற்றங்கள் செய்ய வேண்டியது குறித்து பல்வேறு அரசுத் துறைகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெருமளவில் பயனடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்