கேரளாவில் பாடகர் எஸ்.பி.பி-யின் சிலை திறப்பு

10 அடி உயரமுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையை ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசை அமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார்.
கேரளாவில் பாடகர்  எஸ்.பி.பி-யின் சிலை திறப்பு
Published on

இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் ஆறுமுறை தேசிய விருது, கணக்கில் அடங்கா மாநில விருதுகள் என வரலாறு படைத்துள்ளார்.

இவரது கலை சேவையை பாராட்டி திருவுருவச் சிலை, சாலைகளுக்கு பெயர் என அமைக்கப்பட்டு வருகிறது. முதலில் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம், கோணேட்டம் பேட்டை கிராமத்தில் 4 அடி உயரம் கொண்ட மார்பளவு சிலை அமைக்கப்பட்டது. பின்பு ஹைதராபாத்தில் அரசுக்கு சொந்தமான ‘ரவீந்திர பாரதி’ என்ற கலாச்சார மையத்தில் முழு திருவுருவச்சிலை திறக்கப்பட்டது. இதனிடையே அவர் கடைசியாக வாழ்ந்த சென்னை காம்தார் நகருக்கு அவரது பெயர் சாலைக்கு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம், ஐதராபாத்தை தொடர்ந்து கேரளாவில் தற்போது அவரது சிலை நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில், மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பட்டத்திரிப்பாடு நினைவகத்தில், மலையாள திரைப்பட பின்னணி பாடகர்கள் சங்கமான சமம் மற்றும் ஸ்வரலயா கலை அமைப்பின் கூட்டு முயற்சியில், இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 10 அடி உயரமுள்ள இந்த திருவுருவச்சிலையை ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பாடகர்கள் ஹரிஹரன், கே. எஸ். சித்ரா, சுஜாதா மோகன், உன்னி மேனன், மனோ, விஜய் யேசுதாஸ், ஸ்ரீனிவாஸ், மது பாலகிருஷ்ணன், ஜோத்ஸ்னா, பிஜு நாராயணன், ரிமி டோமி, சித்தாரா கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸி எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. சிலை திறப்பு முடிந்தவுடன் சமம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘சங்கீத மேகம்’ எனும் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சிலை அமைந்திருக்கும் பகுதியை இசை பூங்காவாக மேம்படுத்தவும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com