"குஷி" படத்தின் மறுவெளியீடு: ஆசை ஆசையாய் அசைபோட வைக்கிறது- வைரமுத்து

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி கடந்த 25ந் தேதி மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
"குஷி" படத்தின் மறுவெளியீடு: ஆசை ஆசையாய் அசைபோட வைக்கிறது- வைரமுத்து
Published on

சென்னை,

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான படம் குஷி. இந்தப்படம் தற்போது தரம் உயர்த்தப்பட்டு டிஜிட்டல் முறையில் கடந்த 25ந் தேதி மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. 250க்கும் அதிகமான திரைகளில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், குஷி படம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

"குஷி படத்தின்

மறு வெளியீடு

பாடல்களை மீண்டும்

ஆசை ஆசையாய்

அசைபோட வைக்கிறது

பாடல்கள் வசப்படாத படம்

மறுவெளியீட்டுக்கு வசதிப்படாது

கால் நூற்றாண்டுக்கு

முந்தைய காலத்தின்

பால்ய வயது மற்றும்

பதின்ம வயதுக்காரர்களின்

நினைவுத் தடத்தில்

இன்னும்

கும்மி கொட்டிக்கொண்டே

இருக்கின்றன குஷி பாடல்கள்

ஆர்மோனியக் கட்டைகளையும்

மக்களின் நரம்புகளையும்

ஒருசேரத் தொடத்தெரிந்தவர்

தேவா

என் நெஞ்சிலிருந்த காதல்

தானே எழுந்துகொண்டதா?

நீ எழுப்பினாயா?

என்பது பாடலின் உள்ளடக்கம்

கதைவழி

இதை ஒரு

கவிதைசெய்ய முயன்றேன்

"மொட்டு ஒன்று

மலர்ந்திட மறுக்கும்

முட்டும் தென்றல்

தொட்டுத் தொட்டுத் திறக்கும்

அது மலரின் தோல்வியா?

இல்லை காற்றின் வெற்றியா?

கல்லுக்குள்ளே சிற்பம்

தூங்கிக் கிடக்கும்

சின்ன உளி

தட்டித் தட்டி எழுப்பும்

அது கல்லின் தோல்வியா?

இல்லை உளியின் வெற்றியா?"

'கமர்ஷியல்' பாட்டில்

இப்படி ஒரு கவிதை

தீபாவளி வாரத்தில்

ரங்கநாதன் தெருவில்

புல்லாங்குழல் வாசித்தமாதிரி

அபாய முயற்சி

எஸ்.ஜே.சூர்யாவின்

கலைத் துணிச்சல்

அபாரமானது

விறுவிறு விஜய்

துறுதுறு ஜோதிகா

இருவரும்

பரபர செய்துவிட்டார்கள் பாடலை

திரைக்கதை நுண்மைகளால்

எப்போதும்

இளமையாய் இருக்கும்

இந்தப் படம்

பாடலைக் கேட்டு

என் நாற்பதுகளுக்கு

நகர்கிறேன் நானும்

இப்படி இனிமேல்

படங்கள் வருமா?

பாடல்கள் வருமா?

வரவேண்டும்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com