தொடங்கியது சட்ட நடவடிக்கை... நடிகை பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ்

பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். நடிகர்-நடிகைகள் பலர் அவரை கண்டித்து உள்ளனர்.
தொடங்கியது சட்ட நடவடிக்கை... நடிகை பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ்
Published on

மும்பை,

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்து விட்டதாக கடந்த 2ம் தேதி அவரது குடும்பத்தினரே அறிவித்தனர். பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த தகவல் பதிவிடப்பட்டது. இதனால் அவரது ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு இரங்கல் தெரிவித்தும் வந்தனர்.

இதற்கிடையில் தான் இறந்துவிட்டதாக வெளியிட்ட தகவல் பொய்யானது என்றும், நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் கூறி பூனம் பாண்டே அடுத்த நாளே ஒரு வீடியோ வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தினார். அந்த வீடியோவில், 'நான் உயிரோடுதான் இருக்கிறேன். கருப்பை வாய் புற்றுநோய் தாக்கி ஏராளமான பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள். ஆனால் மற்ற வகை புற்றுநோய்களை ஒப்பிடுகையில் கருப்பைவாய் புற்றுநோய் என்பது தடுக்ககூடிய நோய்தான்.

உரிய பரிசோதனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டால் இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும். உயிரிழப்பை தடுத்து நிறுத்தமுடியும். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கொல்லும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை செய்தேன், என்று பூனம் பாண்டே தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். நடிகர்-நடிகைகள் பலர் அவரை கண்டித்து உள்ளனர். மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பூனம் பாண்டேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கி உள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் தனது வக்கீல் ஷயான் சச்சின் பாசு என்பவர் மூலம் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடரவும் தயாராகி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com