

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது தனது அடுத்த படைப்பான ‘மஞ்சணத்தி’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் தனது மனைவி திவ்யா மாரி செல்வராஜுடன் இணைந்து நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் புதிய படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘மாகாளி’ என பெயரிடப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.பி.அரவிந்த், ‘மாகாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்வாசிகா மற்றும் அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘மாகாளி’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்பதிவு செய்கிறார். மனித வாழ்வின் வலி, எல்லைகள் மற்றும் ஆழமான சமூக அக்கறையை மையமாகக் கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘மாகாளி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனால் ‘மாகாளி’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.