

அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இந்த படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையமைத்துள்ளார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைத்துள்ளார்.
ஹைபர்லிங்க் கிரைம் திரில்லராக உருவாகும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சகோ கணேசன் கூறும்போது, “ நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் திடீரென கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது நான்தான் என்று 4 பேர் சொல்கிறார்கள். அதில் ஒருவர்தான் உண்மையான குற்றவாளி. அவர் யார் என்பதைக் கண்டு பிடிப்பதுதான் கதை. இதில் காதல் காட்சிகள் இருக்காது. சந்தோஷ் பிரதாப் கற்பனை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் திரைக்கதையில் நிறைய புதிய விஷயங்கள் இருக்கும். நிஜமான பேக்டரியில் கொலை காட்சியைப் படமாக்கியபோது அங்கு பணியாற்றியவர்கள் நிஜம் என நினைத்துப் பயந்துவிட்டார்கள் ” என்றார்.
இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கலையரசன் பேசியதாவது, “இப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது.
இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன. தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். விதார்த், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், தேஜு, அதுல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர். மூன்றாம் கண் ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
இத்திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகவுள்ளது.