டி.ராஜேந்தருக்கு பிறகு மிஷ்கின்தான் - இயக்குநர் அமீர்

இயக்குநர் மிஷ்கின், விஜய் சேதுபதி நடித்த ‘டிரெயின்’ திரைப்படத்தை இயக்கி இசையமைத்துள்ளார்.
டி.ராஜேந்தருக்கு பிறகு மிஷ்கின்தான் - இயக்குநர் அமீர்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நாசர், மற்றும் நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஒரே இரவில் ரெயிலில் நடக்கும் த்ரில்...

‘டிரெயின்’ திரைப்படம், ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும். விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா

‘டிரெயின்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், மிஷ்கினின் திறமையையும், அவரது நேர்மையான பேச்சையும் மேடையிலேயே மனதாரப் பாராட்டினார். இயக்குநர் மிஷ்கினை, டி. ராஜேந்தருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தன்னிச்சையாகவும், எதற்கும் அஞ்சாமலும் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பேசும் ஒரு 'தனித்துவமான பேச்சாளர்' என்று இயக்குநர் அமீர் பாராட்டியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், மிஷ்கினைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். “மிஷ்கின் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டவர். தன்னை பொதுவெளியில் வெளிக்காட்டிக் கொள்வதிலும் சரி, படம் எடுப்பதிலும் சரி தனக்கென்று ஒரு பாணியை வைத்திருப்பார். விமர்சனங்கள் வைக்கும்போது நான் இப்படித்தான் என்று அதை எதிர்கொள்வதில் மிஷ்கினுக்கு முதன்மை இடம் உண்டு. அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு என்னை அழைத்துச் சென்று நடனம் ஆட வைத்தார். மிஷ்கின் இப்படி நடிப்பாரா? என்று சொல்லும் அளவிற்கு ஆச்சரியப்பட வைக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி படங்களில் ரசிகர்களின் கண் அவர்களை மட்டும்தான் பார்க்கும். அதே மாதிரிதான் விஜய் படங்களும். ஆனால் விஜய் படத்திலேயே அருகில் இருப்பவர்களைப் பார்க்க வைத்தது இரண்டே பேர்தான். ஒருவர் விஜய் சேதுபதி, மற்றொருவர் மிஷ்கின். இசையிலும் மிஷ்கின் சிறப்பாகப் பணியாற்றுவார். எனக்கு தெரிந்து டி.ஆர் சாருக்குப் பிறகு மிஷ்கின்தான் என்று நினைக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com