

நேபாளம்,
நடிகை கீர்த்தி சுரேஷின் பதிவில், இயற்கை கொஞ்சம் கருணை காட்ட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் சேறு, பாறைகளுடன் கூடிய பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி, நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் 390-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பேரழிவால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களும் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நேபாள வெள்ளப் பேரழிவு குறித்து தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது சமூக வலைதளப் பதிவில், நேபாளத்தில் இருந்து வெளியாகும் காட்சிகள் மிகவும் பயமாகவும் மனவேதனையாகவும் இருப்பதாகவும், அங்குள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகை கீர்த்தி சுரேஷும் இந்த இயற்கைப் பேரழிவு குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இயற்கை கொஞ்சம் கருணை காட்ட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் சில பகுதிகளை சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.