சூர்யா- ஞானவேல் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு

நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் இணையும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே தயாரிக்கிறது.
சூர்யா- ஞானவேல் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு
Published on

சூர்யா நடித்திருந்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான அப்படத்திற்கு வசூல் ரீதியான நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சூர்யாவின் 46-ஆவது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. சூர்யாவின் 47-ஆவது படத்தை, 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவருகிறார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள இப்படத்தை தயாரிக்க உள்ளதாக ஹோம்பாலே நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து சாய் அபயங்கர், சூர்யாவின் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். கயாடு லோஹர் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்களிடம் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சூர்யாவுடன் இணைவது பற்றி அறிவித்திருக்கும் ஹோம்பாலே நிறுவனம், “நிஜ மனிதர்களின் வாழ்க்கை பாரத்தைச் சுமந்த கதாபாத்திரங்கள். ஒவ்வொரு முறையும், வசதியான பாதையைத் தவிர்த்து, துணிச்சலான பாதையையே தேர்ந்தெடுத்த ஒரு கலைப்பயணம். திரையில் முப்பது ஆண்டுகால உண்மை. திரைக்கு வெளியே தொட்டுச் சென்ற கோடிக்கணக்கான இதயங்கள். தன் தலைமுறையின் மிகத் துணிச்சலான ஒரு நடிகன், தனது பிரம்மாண்டமான மேடையைச் சந்திக்கும் தருணம். ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் சூர்யாவை வரவேற்கிறது” எனக குறிப்பிட்டிருக்கிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே பிலிம்ஸ். கே.ஜி.எப், சலார், காந்தாரா என இந்தி அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com