

ஐதராபாத்,
கடந்த 2023- ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று 'பேபி'. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்கேஎன் தயாரிப்பில் சாய் ராஜேஷ் இயக்கிய இப்படம் சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் சவுத் 2024 விருதுகளில் எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை அள்ளியது.
இந்த படத்தை தொடர்ந்து ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா கூட்டணி மீண்டும் 'எபிக்' என்ற படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தை 90ஸ் என்ற வெப் தொடரை இயக்கி புகழ் பெற்ற ஆதித்யா ஹாசன் இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் ப்போர் ஸ்டுடியோஸ் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் சிவாஜி மற்றும் வாசுக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பிரியசகி' என்ற பாடல் குறித்த அறிவிப்பை புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த பாடல் நாளை காலை 11.08 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.