

‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், "வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா" என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது.
இவர் தற்போது ‘பரிமளா & கோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஊர்வசி இணைந்து 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‛பரிமளா அண்ட் கோ' என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார்.
ஊர்வசியுடன் மீண்டும் இணைந்து நடித்திருப்பது குறித்து ஜெயராம் “ஊர்வசியோடு 1988லிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இயக்குநர் பாண்டிராஜ் இந்த 'பரிமளா அண்ட் கோ' ஸ்கிரிப்டைச் சொன்னபோது, நான் நடுவில் நிறுத்தி, 'இந்த கேரக்டரில் ஊர்வசி நடித்தால் நன்றாக இருக்கும்' என்று மனதில் தோன்றியதை உடனே அவரிடம் சொல்லிவிட்டேன். அவரோ, முன்னரே ஊர்வசியிடம் கதை சொல்லிவிட்டதாகச் சொல்ல, எனக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் தாங்க முடியவில்லை.
நாங்கள் இரண்டு பேரும் 26 படங்களுக்கு மேல் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கிறோம். ஊர்வசி நான்கைந்து ஸ்டேட் அவார்டுகள் வாங்கினார். அவை அனைத்துமே நாங்கள் இணைந்து நடித்த படங்கள்தான். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். எல்லோரும், எங்கள் காமெடியைப் பற்றி நிறைய பேசுவார்கள். சொல்லப்போனால், அழுவதுபோலக்கூட நடித்துவிடலாம். மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் வகையில் காமெடி செய்வதுதான் கஷ்டம்.
கதையோடுகூடிய காமெடி, பல படங்களில் எங்கள் காம்போவுக்கு வெற்றியைத் தந்தது. சீரியஸ் படங்களிலும் வெற்றி கிடைத்தது. அவரது திரை அனுபவம் பெரிது. தன்னுடன் நடிக்கும் இளையவர்களையும், நடிப்பில் மிளிரச் செய்துவிடுவார். மலையாளத்தில் அவருடன் நடிக்கும்போது, நாங்கள் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். அவருடன் நடிக்கும் போது ஒரு சிறிய பயத்துடனே நடிக்க வேண்டியது இருக்கும். நம்மை கண நேரத்தில் நடிப்பில் வீழ்த்திவிட்டு, மக்களிடம் பெரிய கைத்தட்டலை வாங்கிவிடுவார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி” என்று கூறினார்.