பாகிஸ்தான் படங்களை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது: நெட்பிளிக்ஸுக்கு மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு படைப்புகளையும் ஒளிபரப்பக் கூடாது என நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான்  படங்களை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது: நெட்பிளிக்ஸுக்கு மத்திய அரசு உத்தரவு
Published on: 

இந்தியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட எந்தவொரு படைப்புகளையும் ஒளிபரப்பக் கூடாது என நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு வழங்கிய உறுதிமொழியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் வெப் தொடர்

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் பவாத் கான், மஹிரா கான் உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜோ பச்சே ஹைன் சாங் சமேத் லோ' என்ற வெப் தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிசம்பர் 4-ம் தேதி உலகளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்கான டிரெய்லரும் அண்மையில் வெளியானது. இந்தத் தொடர் இந்தியாவிலும் ஒளிபரப்பப்படலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, இந்தத் தொடரை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒளிபரப்ப தடை

முன்னதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் வெப் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான டிஜிட்டல் படைப்புகளையும் இந்தியாவில் ஒளிபரப்புவதை நிறுத்துமாறு ஓடிடி தளங்களுக்கு கடந்த 2025-ம் ஆண்டு மே 8-ம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அளித்த உறுதிமொழியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த படைப்புகள் இந்தியாவில் ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த வெப் தொடர் டிசம்பர் 4-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள நிலையில், இந்தியாவில் அதன் ஒளிபரப்பு தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

X