

சென்னை,
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில், 'ஜெயிலர் 2' படத்தில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணா முக்கியத்துவம் வாய்ந்த சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தை, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அதிரடி கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா, சிம்ரன், ராஷி கன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மேலும், தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'தர்மன்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அண்மையில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் பழக்கடை மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். குறிப்பாக, அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் அடுத்ததாக 'தர்மன்' படத்தில் சிறியதாக இருந்தாலும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வேடத்தில் முதலில் வேறொரு நடிகரை நடிக்க வைக்கப் படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், 'ஜெயிலர் 2' படத்தில் நமோ நாராயணாவின் நடிப்பைப் பாராட்டிய ரஜினிகாந்த், அவரைப் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.