

சென்னை,
2017-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில், இயக்குநர் கோபி நைனார் இயக்கத்தில் வெளியான அறம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக அக்கறை மிக்க கதைக்களத்துடன் உருவான இந்த படம், குடிநீர் பிரச்சினை, ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் முயற்சிகள் மற்றும் அதில் ஏற்படும் அரசியல் குறுக்கீடுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்த நயன்தாராவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. உணர்ச்சிகரமான காட்சிகளிலும், அதிகாரமிக்க தோற்றத்திலும் அவர் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் ராமச்சந்திரன் துரைராஜ், சுனு லட்சுமி, விக்னேஷ், ரமேஷ் மற்றும் வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாக ‘அறம்’ இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.
‘அறம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர். ராஜேஷ் சமீபத்திய நேர்காணலில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், ‘அறம் 2’ படத்திற்கான கதை தற்போது முழுமையாக தயாராக இருப்பதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.