

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக இருந்து நடிகராகி தற்போது படங்களை இயக்கியும் வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2011 இல் வெளியான காஞ்சனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து மூன்று பாகங்கள் எடுக்கப்பட்டன. தற்போது, ராகவேந்திரா புரடக்ஷன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா -4 உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நோரா ஃபதேகி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதில், பேய் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளாராம்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ஹாரர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிமான்டி காலனி - 3 படத்தை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து அப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் இணைவார் எனத் தெரிகிறது.