47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி - கமல்: படப்பிடிப்பு எப்போது?

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
KHxRK
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில் இணைவதால், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார். இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இந்த படத்தில் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரலான அறிமுக காணொளி

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் அறிமுக காணொளி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, “யார் ஹீரோ?” என்று ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இயக்குநர் நெல்சனிடம் கேட்கும் காட்சி ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு பேசுபொருளானது.

இந்த திரைப்படம் 1980 மற்றும் 1990-களின் திரைப்பட பாணியை நினைவூட்டும் வகையில் பழைய ஒளிப்படச் சுருள் முறையில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு பதிலாக பாரம்பரிய ஒளிப்படச் சுருள் கேமராக்களை பயன்படுத்த இயக்குநர் நெல்சன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நடிகை திரிஷா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

2027-ல் தொடங்கும் படப்பிடிப்பு?

இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் இந்த பிரமாண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2027-ஆம் ஆண்டில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com