ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் திரையரங்கு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.
ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் திரையரங்கு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Published on

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியா திரையரங்கு உரிமையை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணைந்த ரஜினி – நெல்சன் கூட்டணி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.

‘ஜெயிலர் 2’ படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கிள்

இப்படம் ரூ.350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் , இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அல்ல போலேலோ’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியிருந்தார் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் ‘காவாலா’ பாடலைப் போல ‘அல்ல போலேலோ’ பாடலும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வைரலானது.

கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

‘ஜெயிலர் 2’ படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.

கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்திய திரையரங்கு உரிமை

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியா திரையரங்கு உரிமையை பிரபல திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான கோகுலகம் பிலிம்ஸ் ரூ. 60 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனை ரஜினி படத்திற்கு மட்டுமே சாத்தியம் என திரை வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

தெலுங்கு திரையரங்கு உரிமை

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கான தெலுங்கு திரையரங்கு உரிமைகளை பிரபல தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சியின் சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாகத் தெரிகிறது

ஓ.டி.டி உரிமம்

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஓ.டி.டி உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.160 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஜெயிலர்’படத்தின் முதல் பாகத்தின் ஓ.டி.டி உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.100 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com