

சென்னை,
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த நடிகை ரகுல் பிரீத் சிங். டெல்லியை சேர்ந்த இவர், கிளாமர் கதாபாத்திரங்களில் மட்டுமில்லாமல், வித்தியாசமான வேடங்களிலும் நடித்துக் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது தொழில்முறை நெறிமுறைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பொதுவாக பிறமொழி நடிகைகள், அந்த மொழி தெரியாவிட்டாலும், படப்பிடிப்பின் போது 1,2,3,4 அல்லது ABCD போன்ற எழுத்துக்கள், எண்களை சொல்வதன் மூலம் லிப் சிங்க் செய்து காட்சிகளை முடித்து விடுவார்கள். ஆனால் இந்த முறைக்கு ரகுல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தாம் பணிபுரியும் திரையுலகிற்கும், தங்களை அன்புடன் வரவேற்கும் ரசிகர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது:
“ எனக்கு ஏமாற்ற தெரியாது. தெரியாத மொழியில் நடித்தால் 1,2,3,4 அல்லது ABCD சொல்லி லிப் சிங்க் செய்து காட்சிகளை முடிக்க மாட்டேன். நமக்கு வாழ்வு கொடுக்கும் இந்த திரையுலகிற்கும், அளவில்லா அன்பு தரும் ரசிகர்களுக்கும் நாம் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதை அது அல்ல” என தெரிவித்துள்ளார்.
மேலும், வசனங்களை சரியாக பேச மொழி அறிவு அவசியம் மட்டுமல்ல, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை உண்மையாக வெளிப்படுத்தவும் மொழி புரிதல் மிகவும் முக்கியம் என்று ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.