

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இதற்கிடையில், இந்த படத்தின் டிரெய்லர், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தன.
‘பெத்தி’ படத்தில் ஆண்களுக்கு நடுவே சுருதிஹாசன் கவர்ச்சி நடனம் ஆடும் ‘ஹல்லலோ’ பாடல் வெளியானது. சுருதிஹாசனும், ஜான்வி கபூரும் நடனமாடுகிறார். பெண்களை கவர்ச்சி பொருளாக்கி அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் இருப்பதாக பலரும் விமர்சித்து வந்தனர். ராம் சரண் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ‘பெத்தி’ படத்தின் பாடல் கவர்ச்சியாகவும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது தொடர்பாக நடிகர் ராம் சரண் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “ஆர்ஆர்ஆர் படத்தில் என்னுடன் நடனமாடிய ஜூனியர் என்டிஆர் உடன் எப்படி நான் கால்களை அசைத்து நடனமாடினேனோ அதேபோல, தான் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், ஜான்வி கபூருடன் நடனமாடினேன்.2 பாடல்களுக்கும் இடையே எந்த வித வித்தியாசத்தையும் நான் உணரவில்லை. அது எப்படி பெண்களை இழிவுப்படுத்தும், காட்சி பொருளாக்கும் விஷயமாக மாறும் என்பது எனக்கு புரியவில்லை. எப்படியிருந்தாலும், அது எங்கள் நோக்கமில்லை” என தெரிவித்துள்ளார்.