

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங், 2010-ஆம் ஆண்டு வெளியான பாண்ட் பாஜா பாராத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது வித்தியாசமான நடிப்பு, தனித்துவமான உடை அலங்காரம் மற்றும் கதாபாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், 83 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
பல விருதுகளை வென்றுள்ள ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்திய சினிமாவில் அதிகம் பேசப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக அவர் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், ரன்வீர் சிங்கின் சம்பளம் தொடர்பான தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, துரந்தர் திரைப்படத்திற்காக அவர் வழக்கமான சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் லாபத்தில் பங்கு பெறும் வகையில் ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் இணைந்து ரூ.3,200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகவும், அதன் அடிப்படையில் ரன்வீர் சிங் ரூ.325 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொகையின் மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற புதிய சாதனையை ரன்வீர் சிங் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஷாருக்கான், ரஜினிகாந்த் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் சம்பள சாதனைகளையும் அவர் முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த சம்பள விவரம் தொடர்பாக படக்குழு அல்லது ரன்வீர் சிங் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.