

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
ரவி மோகனின் 34-வது படமான ‘கராத்தே பாபு’ படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இயக்குனர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், நடிகர் ரவி மோகனின் அரசியல்வாதி கதாபாத்திரம் பெரும் பேசுபொருளானது.
இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ் ஜிவால், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் ‘ராசாதி ராசா’ எனும் முதல் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
பாடகி மீனாட்சி இளையராஜா வரிகள் எழுதி பாடியுள்ள இந்தப் பாடல் நாளை (ஜூன் 12) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.