அக்‌ஷய் குமாரின் ‘சாமுக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அக்‌ஷய் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அக்‌ஷய் குமாரின் ‘சாமுக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

மும்பை,

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைகதை திரைப்படமான ‘சாமுக்’ (Samuk) படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் 2027-ம் ஆண்டு மே 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். இவர் தற்போது, கனிஷ்க் வர்மா இயக்கத்தில் ‘சாமுக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அக்‌ஷய் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். அந்த போஸ்டரில், வேற்றுலக உயிரினம் ஒன்று அச்சுறுத்தும் வகையில் காட்சியளிக்க, காட்டுக்குள் துப்பாக்கியுடன் எதிரிகளை எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறார் அக்‌ஷய் குமார்.

இதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எதிரி மனிதன் இல்லை. ஆனால் இந்தப் போராட்டம் மனித குலத்துக்கானது. பின்வாங்குவதற்கு வாய்ப்பில்லை. உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் ‘சாமுக்’ 2027 மே 28-ந் தேதி படையெடுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏலியன் பின்னணியில் அதிரடி கதை

அறிவியல் புனைகதை, ஏலியன் ஆக்‌ஷன் திரில்லர் மற்றும் சர்வைவல் ஹாரர் என பல அம்சங்களைக் கொண்ட இப்படத்தை கனிஷ்க் வர்மா இயக்குகிறார். விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்கிறார். அக்‌ஷய் குமாருடன் ருக்மணி மைத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது லண்டனில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வேற்றுலக உயிரினங்கள் தொடர்பான காட்சிகளை ‘ஏலியன்’, ‘பிரிடேட்டர்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அலெக் கில்லிஸ் வடிவமைத்து வருகிறார். அதேபோல், ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘ஸ்டார் வார்ஸ்’, ‘நோ டைம் டு டை’ போன்ற படங்களில் பணியாற்றிய பிரிட்டனைச் சேர்ந்த சண்டைக் காட்சி இயக்குநர் லூக் டம்பர், இப்படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளை உருவாக்கி வருகிறார்.

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

அக்‌ஷய் குமாரும், தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷாவும் ஏற்கனவே ‘ஆக்கேன்’, ‘வக்த்: எ ரேஸ் அகைன்ஸ்ட் டைம்’, ‘நமஸ்தே லண்டன்’, ‘சிங் இஸ் கிங்’, ‘ஹாலிடே’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்துள்ள ‘சாமுக்’ திரைப்படம் சர்வதேச தரத்திலான அதிரடி மற்றும் உயிர் பிழைத்தலுக்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட படமாக உருவாகி வருகிறது. படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்‌ஷய் குமார் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

X