50வது நாளை கடந்த "ரெட்ரோ".. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உருக்கம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'ரெட்ரோ' படம் கடந்த மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியானது. ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் 'ரெட்ரோ' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படம் 50வது நாளை கடந்துள்ளது. 'ரெட்ரோ' திரைப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார், "ரெட்ரோ வெளியான பிறகு, அது கிட்டதட்ட ஒரு போரையே எதிர்கொண்டுவிட்டது. எங்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட வெறுப்பு தாக்குதல்களையும் தாண்டி, நீங்கள் கொடுத்த அன்புதான் போரில் ஜெயிக்க வைத்துள்ளது" என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.






