

மும்பை,
மும்பை ஜூகுவில் திரைப்பட தயாரிப்பாளர் ரோகித் ஷெட்டி வசித்து வந்த 9 மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் கடந்த 1-ந்தேதி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் அங்கிருந்த உடற்பயிற்சி கூடத்தின் கண்ணாடி சேதமடைந்தது. இந்த சம்பவத்துக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த சுபம் லோன்கர் பொறுப்பேற்றுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளி தீபக் சர்மா உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இதில் தீபக் சர்மா உள்பட 7 பேரின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மோக்கா சிறப்பு கோர்ட்டு நீதிபதி சத்யநாராயண் நவந்தர் முன் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆயுதங்கள் தொடர்பான சில மீட்புப்பணிகள் இன்னும் செய்யப்பட வேண்டியிருப்பதால், அவர்களை மேலும் 10 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய வக்கீல் திலீப் சுக்லா, போலீஸ் காவலை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீபக் சர்மா உள்பட 7 பேரின் போலீஸ் காவலை வருகிற மார்ச் 4-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் 5 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.