நடிகை லோபமுத்ரா ராவத் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை.. பீகார் வாலிபர் கைது

ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பீகார் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை லோபமுத்ரா ராவத் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை.. பீகார் வாலிபர் கைது
Published on

மும்பை,

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையும், மாடலுமான லோபமுத்ரா ராவத்தின் மும்பை வீட்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பீகாரைச் சேர்ந்த 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகையின் வீட்டில் கொள்ளை

மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் இந்தி நடிகை லோபமுத்ரா ராவத் வசித்து வரும் வீட்டில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி இரவு ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை சாந்தாகுரூஸ் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீட்டை நோட்டமிட்ட கொள்ளையன்

போலீசார் நடத்திய விசாரணையில், பீகாரைச் சேர்ந்த சந்தன் முகியா என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. நடிகையின் வீட்டை கடந்த ஜூலை மாதம் முதலே அவர் நோட்டமிட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

5-வது மாடியில் துணிகர கொள்ளை

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை அறிந்துகொண்ட சந்தன் முகியா, ஜூலை 14-ம் தேதி இரவு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். நடிகையின் வீடு 5-வது மாடியில் அமைந்திருந்த நிலையில், அங்கு செல்வதற்காக மூங்கில் தட்டையை பயன்படுத்தி, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர், படுக்கையறையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளார்.

கொள்ளையடித்த பின்னர் அதே வழியாக தப்பிச் சென்றதாகவும், சுமார் ஒரு மணி நேரத்திற்குள் முழு கொள்ளையையும் முடித்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

ரூ.51 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

கொள்ளை சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சந்தன் முகியா மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் இருந்து சுமார் ரூ.51 லட்சம் மதிப்புள்ள கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். இதில் ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள சொகுசு கைக்கடிகாரம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 தங்கக் கட்டிகள் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கும். எனினும், கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பொருட்களும் இதுவரை மீட்கப்படவில்லை. மீதமுள்ள பொருட்களை மீட்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழில்நுட்ப உதவியுடன் சிக்கிய கொள்ளையன்

சந்தன் முகியாவின் செல்போன் எண் மற்றும் இருப்பிடத் தகவல்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பை போலீசார் பீகாருக்கு சென்று, அங்குள்ள உள்ளூர் போலீசாரின் உதவியுடன் சந்தன் முகியாவை கைது செய்தனர்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய சந்தன் முகியாவுக்கு உதவியதாக கூறப்படும் அவரது உறவினர் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள பொருட்களை மீட்கவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com