ரீ-ரிலீஸான சச்சின் படம்.. நடிகை ஜெனிலியாவின் நெகிழ்ச்சி வீடியோ வைரல்

சச்சின் படத்தில் நடிகை ஜெனிலியா 'ஷாலினி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சென்னை,
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'சச்சின்'. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். தாணு தயாரித்திருந்த இப்படத்தில் வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருந்த இந்தப் படம், நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கடந்த 18-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸான இத்திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சச்சின் திரைப்படம் உலகளவில் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த படத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா இடையே இருக்கும் மிக அழகான கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. சச்சின் படத்தில் ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜெனிலியா விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் அவருடைய நன்றியை தெரிவித்து நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






