

சென்னை,
மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. குறிப்பாக மலர் டீச்சர் கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், தற்போது இந்தி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் 'சீதாராம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது திரைப்படத்திலும் சாய் பல்லவி கதாநாயகியாக இணைந்துள்ளார். 'அமரன்' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் சாய் பல்லவியுடன் நடிகை ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது படப்பிடிப்பு பகுதிகளை நிறைவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தனுஷ் 55 படத்தில் சாய் பல்லவி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது திரைப்பட பயணத்தில் இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, முதல் முறையாக காவல் துறை அதிகாரி வேடத்தில் தோன்றவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நடிகையாக அறியப்படும் சாய் பல்லவி, இந்த புதிய அவதாரத்தில் எப்படி ரசிகர்களை கவரப்போகிறார் என்பது குறித்து திரையுலக வட்டாரங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தனுஷ் 55 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.