உடல் எடை குறித்த விமர்சனங்களுக்கு சட்டையை கழற்றி சல்மான் கான் பதிலடி

நீங்கள் தியேட்டரில் திரைப்படத்தை பார்ப்பதற்குதான் விலை கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள், ஆனால் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவில்லை என்று சல்மான் கான் கூறியுள்ளார்.
உடல் எடை குறித்த விமர்சனங்களுக்கு சட்டையை கழற்றி சல்மான் கான் பதிலடி
Published on

நடிகை கத்ரீனா கைப்பின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக சல்மான் கான் குரல் கொடுத்துள்ளார்.

உருவக்கேலி

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப். இவர் நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 7-ந் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காத கத்ரீனா கைப் சமீபத்தில் மும்பையில் உள்ள அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கணவர் விக்கி கவுசலுடன் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஏனெனில் நடிகை கத்ரீனா கைப் உடல் எடை கூடியிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை உருவக்கேலியும், கிண்டலும் செய்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

கத்ரீனாவுக்கு ஆதரவாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். மேலும் திரைப்பிரபலங்களும் நடிகைக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தனர்.

மோசமான விமர்சனங்கள்

இந்த நிலையில் இந்தி மொழியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டார். அப்போது அவர், “ஒரு பெண் உடல் எடை கூடினால், அவர் குண்டாகிவிட்டதாக வலைதளத்தில் மோசமான விமர்சனங்கள் எழுகிறதை பார்க்க முடிகிறது. ஒரு வயதான நடிகர், அவர் வயதாகிவிட்டார் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறார். இந்த வகையான விமர்சனங்கள் பொதுவாக பார்க்கப்படுகிறது, ஆனால் அவை உண்மையில் சம்பந்தப்பட்ட நபர்களை மிகவும் அதிகமாக பாதிக்கிறது.ஒருவர் கர்ப்பமானார் என்பதற்காக, அவரை ஏன் சமூக வலைதளத்தில் மிகவும் கீழ்த்தரமாக கிண்டல் செய்கிறீர்கள்?

கர்ப்பத்திற்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வரும் பெண்கள், தங்களின் முந்தைய இயல்பான தோற்றத்திற்கு திரும்புவார்கள். மேலும், அவர்கள் விரும்பினால் மீண்டும் தங்களின் உடலை பிட்டாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பார்கள். நிச்சயமாக எனக்கு 60 வயது ஆகிவிட்டது. என்னால் எனது இளமை காலத்தில் நடித்த 'மைனே பியார் கியா' படத்தின் உடலைப் போல் என்றென்றும் இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.

இதையடுத்து மற்றவர்களை விமர்சனம் செய்வபர்கள் முதலில் உங்களை பாருங்கள், என்று கூறிய சல்மான் கான் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று தனது சட்டையை கழற்றினார். அப்போது அவர் மேடையில் தனது கவ்பாய் தொப்பி, ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட்டை கழற்றி தனது உடலை கேமராவில் காண்பித்தார்.

இதைத்தொடர்ந்து அவர், “உங்கள் படம் நன்றாக இல்லை என்றாலும், நாங்கள் நடித்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சொல்லுங்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நீங்கள் தியேட்டரில் திரைப்படத்தை பார்ப்பதற்கு தான் விலை கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள்; ஆனால் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவில்லை” என்று அவர் கூறினார்.

இறுதியில் அவர், பொதுவெளிகளில் சாதாரன உடையில் வரும் நடிகைகளை, அவர்களின் அனுமதியின்றி தங்கள் கேமராக்களில் புகைப்படம் எடுப்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார். மேலும், பெண்களின் இடுப்பு, தொடைகள் மற்றும் முதுகு பகுதிகளை வேண்டுமென்றே கேமராக்களில் புகைப்படம் எடுப்பவர்களை சல்மான் கான் விமர்சனம் செய்தார். இதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு, ஒரு பொழுதுபோக்கு செய்திகளாக பார்க்கப்படுவதாகவும் சல்மான் கான் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com